சில நல்ல இதயங்கள்

  • Home
  • /
  • சில நல்ல இதயங்கள்
"வரலொட்டி ரெங்கசாமி எழுதிய 'வேதமடி நீ எனக்கு' என்ற "

நூலிலிருந்து...

சில நல்ல இதயங்கள்

மதுரை மாநகரம். வெளியே மனதை மயக்கும் குளிர்காலத்தின் சுகமான மாலைப் பொழுது. உள்ளே - ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள்ளே இரவா பகலா என்று தெரியாத அளவிற்குச் சீரான வெளிச்சம்.

நெஞ்சை உலுக்கும் சாவின் நெடி. அறைக்கு வெளியே ஒரு முப்பது வயதுப் பெண் கதறிக் கொண்டிருந்தாள். அவளுடைய ஏழு வயது மகன் ரிஷி உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். மருத்துவத்துறையின் பல வல்லுனர்கள் அந்தச் சிறுவனைப் பார்த்துவிட்டார்கள். கடைசி முயற்சியாக சிறுவனின் தொண்டையில் ஒரு துளையிடும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் – அதுவும் மறுநாளே செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு கூட்டமாக வந்த மருத்துவர்கள் அந்தத் தாயைத் தேவைக்கு அதிகமாகவே பயமுறுத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து அழக்கூடத் தெம்பில்லை. அவள் மதுரையைச் சேர்ந்தவள். மதுரையரசியான பச்சைப்புடவைக்காரியிடம் தன் மனதைப் பறிகொடுத்தவள். “என்னை மட்டும் ஏனம்மா இப்படித் துன்புறுத்துகிறாய்?” என்று அவள் எங்கள் ஸ்ரீமாதாவை, ஸ்ரீமகாராஞ்ஞியை, ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரியைக் குற்றம் சாட்டவில்லை. “தாயே! கும்மிருட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன். எனக்கு ஒரு வழி காட்டவேண்டும் அம்மா. வழித்துணைக்கு ஒரு நல்லவரைக் காட்ட வேண்டும் அம்மா. எனக்கு என்று நீ விதித்த துன்பத்தை நான் அனுபவித்துவிடுகிறேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத இந்த நிலை எனக்கு அச்சத்தைக் கொடுக்கிறது தாயே!” அண்டசராசரங்களையாளும் அந்தப் பச்சைப்புடவைக்காரி கண்ணசைத்தாள். யார் எந்த அளவு இன்ப-துன்பம் அனுபவிக்கவேண்டும் என்ற கணக்கை – அவளே எழுதிய கணக்கை – மாற்றாமல் தன் குழந்தைகளின் துன்பத்தை எப்படிக் குறைப்பது என்பதுதான் அவளுடைய முழுநேரச் சிந்தனை.

இரவு ஒன்பது மணி. தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியே அந்தப் பெண் மட்டும் தனியாக நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தாள். மற்றவர்கள் எல்லாம் சென்றுவிட்டார்கள். ரிஷிக்குப் பிறவியிலிருந்தே சர்க்கரை நோய் இருந்ததால் (Type 1 Diabetes) அந்தத் துறையின் வல்லுனரான ஒரு இளம் மருத்துவர் ரிஷியைப் பார்க்க வந்திருந்தார். சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தவரின் கால்களில் விழுந்தாள் ரிஷியின் தாய். “டாக்டரய்யா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுங்களா? நாளைக்கு என் செல்லத்துக்குப் பிறந்தநாளுங்க. ஒவ்வொரு வருஷமும் நிறைய பலூன் பொம்மை எல்லாம் வாங்கி கேக் வெட்டிக் கொண்டாடுவோங்க. இந்தப் பிறந்தநாளைக்கு அவன் தொண்டையையே வெட்டப்போறாங்களாம்யா. என்ன கொடுமைய்யா! ஆப்பரேஷன்ல ரிஷிக்கு எதுனாச்சும் ஆயிருச்சின்னா..“ இளம் மருத்துவர் மனம் நெகிழ்ந்தார். “ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா. என்னால என்ன செய்ய முடியும்னு பாக்கறேன்” சரி இவரும் பத்தோடு பதினொன்றுதான் என்று நினைத்துத் தரையில் படுத்துக் கண்ணசந்துவிட்டாள் அந்தப் பாவப்பட்ட பெண்மணி.

காலை மணி ஆறு இருக்கும். “டாக்டர் உங்கள உள்ள வரச்சொன்னாங்க” – ஒரு நர்ஸ் அவளை எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றாள். ரிஷி இருந்த படுக்கயைச் சுற்றிப் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த அறை முழுவதும் தோரணங்கள். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேறு சில குழந்தைகள் ரிஷியை வாழ்த்திக்கொண்டிருந்தார்கள். இரண்டு கிலோ சாக்கலேட் கேக் ஒன்றை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தாள் ஒரு நர்ஸ். கேக் ரிஷிக்கு முன் வைக்கப்பட்டது. குழந்தைகள் மெல்லிய குரலில் ஹேப்பி பர்த் டே பாடினார்கள். “பாத்தியாம்மா?” ரிஷியின் குரலில் அதீதப் பெருமை. ரிஷி கேக் வெட்டினான். எல்லோரும் கை தட்டினார்கள். அந்த இளம் மருத்துவர் ரிஷிக்கு ஒரு பொம்மையைப் பரிசாகக் கொடுத்தார். வந்திருந்த குழந்தைகளுக்கு எல்லாம் பரிசுகள் கொடுக்கப்பட்டன. அங்கே ஒரு மருத்துவ அதிசயம் நடந்து கொண்டிருந்தது. (எனக்கு இந்த வார்த்தையில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. நடந்தது அன்பின் அதிசயம். இந்த முறை ஒரு மருத்துவமனையில் நடந்தது. அவ்வளவுதான்.) அந்தச் சில நிமிடங்கள் ரிஷி அனுபவித்த உண்மையான மகிழ்ச்சி அவன் உடலில் பல விந்தையான மாற்றங்களைச் செய்திருந்தது.

சிறிது நேரம் கழித்து ரிஷியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் தொண்டையில் துளையிடும் அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள் ரிஷியின் தாய் அந்த இளம் மருத்துவரின் கால்களைத் தன் கண்ணீரால் கழுவினாள். அந்தப் பெண்ணின் சோதனை அதோடு முடிந்துவிடவில்லை. ரிஷியின் தங்கைக்கும் அதே சர்க்கரைக் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவளுடைய கணவன் குடும்பத்தை விட்டு ஓடிவிட்டான். பாவம், அவ்வளவாகப் படிக்காத அந்தப் பெண் மிகவும் கஷ்டப்பட்டுத் தன் இரு குழந்தைகளையும் வளர்த்து வருகிறாள்.

Type 1 Diabetes வந்துவிட்டால் அதற்கு ஒரே சிகிச்சை தொடர்ந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதுதான். எப்படியும் ஒருவருக்கு ஒரு மாதம் ஊசிபோடும் செலவு 2500 முதல் 3000 ரூபாய் வரை ஆகும்.இந்த நிலையைக் கண்ட அந்த இளம் மருத்துவர் துடித்தார். இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று பரபரத்தார். ஒரு அறநிலை ஆரம்பித்து அதன் மூலம் ஒவ்வொரு குழந்தையின் சிகிச்சையையும் ஒரு நல்ல மனம் படைத்த செல்வந்தர் ஏற்றுக்கொண்டால்.. இந்த சிந்தனைதான் இதயங்கள் என்ற அறநிலையை அவர் தொடங்குவதற்கு வித்தாக இருந்தது.. ரிஷி, ரிஷியின் தங்கை ரம்யா இருவரின் மருத்துவச் செலவையும் இதயங்கள் அறநிலை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அந்த அறநிலையின் ஆரம்பவிழாவில் பேசுவதற்கு நான் கோவை சென்றிருந்தேன். நானும் என் மனைவியும் அந்த இளம் மருத்துவரின் வீட்டில்தான் தங்கியிருந்தோம். அந்த மருத்துவரின் பெயர் கிருஷ்ணன் சுவாமிநாதன். அவருடைய மனைவியும் ஒரு மருத்துவர்தான் – டாக்டர் சுஜிதா. அந்த அறநிலையில் பயன் பெற்ற பல நோயாளிகள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். எந்தக் கூட்டத்தையும் எளிதாகச் சமாளித்துவிடும் நான் அன்று மேடையில் உடைந்து அழாமல் இருக்கப் பிரம்மப்பிரயத்னம் செய்தது எனக்கு மட்டும்தான் தெரியும். பச்சைப்புடவைக்காரி என் தாய் மட்டுமல்ல. என் ஞானகுருவும்தான். ‘நீ எப்போதும் உன் சுகத்தை மட்டுமே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாயே! இவர்களைப் பார்!’ என்று பெரிய பாடம் கற்றுக் கொடுத்தாள்.

நான் மேடையில் பேசும் போது சொன்னேன். “பலநாள் உண்ணா நோன்பிருந்து திருப்பதி மலையில் நடந்து சென்று எம்பெருமானைச் சந்திப்பது புனிதமான செயல்தான். ஆனால் இன்று இந்த நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையும் அவர்களுக்குத் தன்னலம் பார்க்காமல் சிகிச்சையளித்துவரும் கிருஷ்ணன் சுவாமிநாதனையும் பார்ப்பது அதைவிட ஆயிரம் மடங்கு புனிதம் நிறைந்தது.” பிறவியிலேயே சர்க்கரை நோயால் தவிக்கும் ஒரு மாணவன் அன்று மேடையில் பேசினான். அவன் ப்ளஸ் டூவில் வாங்கிய மதிப்பெண்கள் 1181. “என்னை நோயாளியாக மட்டும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்று உயிரைக்கொடுத்துப் படித்தேன்” என்று அவன் சொன்னபோது அவன் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும் போல் தோன்றியது. பத்து வயதில் சர்க்கரை நோய். பதினாறு வயதில் சிறுநீரகங்கள் பாதிப்பு. அதனால் டயாலிசிஸ் என்ற நிலையில் இருக்கும் பலரைக் காணும் போது இந்தக் காசு, பணம், புகழ், வீடு, கார் டிவி என்றிவை எல்லாமே குப்பை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி மனம் வாடி, பிறரை வாட்டுவது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மத்தியில்

கண்ணீர் சிந்தும் கண்கள் மீது கருணை காட்ட வேண்டும்
வாடும் நெஞ்சம் ஆறும் வண்ணம் வார்த்தை பேச வேண்டும்
ஊனம் கொண்ட உயிர்கள் வாழ உதவும் எண்ணம் வேண்டும்
அழுதால் வந்து தழுவும் அன்பு அன்னை உள்ளம் வேண்டும்

என்று தன் செயலால் நமக்கு அறிவுறுத்தும் திரு கிருஷ்ணன் சுவாமிநாதனை வணங்கி வாழ்த்துவோம். நம் நாட்டில் இருக்கும் நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ஆயிரம் ஆயிரம் கிருஷ்ணன் சுவாமிநாதன்கள் தேவை. நமக்குக் கிடைத்த ஒருவரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இப்போதெல்லாம் நான் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. முன்னால் எல்லாம் என் புத்தகங்கள் வெளிவந்தால் அதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று உங்களைக் கேட்பேன். இப்போது அதைக்கூட விட்டுவிட்டேன். அப்படிப்பட்ட நான் உங்களிடம் திரு கிருஷ்ணன் சுவாமிநாதனுக்காக – அவர் தொடங்கியிருக்கும் இதயங்கள் அறநிலைக்காக – மடியேந்திப் பிச்சை கேட்கிறேன். உங்களால் முடிந்த உதவியை இதயங்களுக்குச் செய்யுங்கள். அந்த நல்ல மனிதர் செய்யும் நல்ல காரியத்திற்கு உங்கள் பங்களிப்பை நல்குங்கள். பாரதியின் வார்த்தைகளைக் கொண்டு உங்களிடம் பிச்சை கேட்கிறேன்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!

அதுவுமற்றோர் வாய்ச் சொல் அருளீர்! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

எப்படி உதவலாம் என்று அறிந்து கொள்ள அந்த அறநிலையின் வலைதளத்துக்குச் செல்லுங்கள். (www.idhayangal.org)

Donate to Idhayangal Charitable Trust

Cheque in favour of Idhayangal CHARITABLE TRUST

mail: snehasswaminathan@gmail.com
Kindly send cheque in favour of Idhayangal Charitable Trust and post to